உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்று பழைய பழமொழி ஒன்று உண்டு. ஆனால் ஊர்க்குருவியும் பருந்தாகும் என்கிற நம்பிக்கை முன்னெடுப்பில் பருந்தாகுது ஊர்க்குருவி என ஒரு படத்திற்கே தலைப்பையும் வைத்து படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குனர் ராமிடம் சிஷ்யனாக பணிபுரிந்த தனபாலன் கோவிந்தராஜ் இயக்கியுள்ளார். சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா மற்றும் நிஷாந்த் ரூசோ ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார்.
இந்த படத்தின் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது சமீபத்திய சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களாக வலம் வரும் மாரி செல்வராஜ், ரஞ்சித் ஜெயக்கொடி, கணேஷ் பாபு, விருமாண்டி, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த நிகழ்வில் இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் பேசும்போது, “நான் இந்த இடத்திற்கு வந்து நிற்க முக்கிய காரணம் ராம் சார். அவர் கற்றுக்கொடுத்தது தான் எல்லாம். அவருக்கு நன்றி. இந்தப்படம் நண்பர்களால் உருவானது. சுந்தர் போட்ட விதைதான் இந்தப்படம். சுரேஷ் சுந்தர் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. கடைசி வரை உடனிருக்கும் நண்பர்கள். வெங்கி சந்திரசேகர் மற்றும் அருண் ஆகியோரும் எங்களுடன் இணைந்து பயணிக்கும் நண்பர்கள். இந்தப்படத்தின் விஷுவல் நன்றாக வந்ததற்குக் காரணம் அஷ்வின் நோயல். மாஸ்டர் ஓம் பிரகாஷ், இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நடிகர்கள் படக்குழுவில் பணியாற்றிய அனைவரும் அவர்கள் படம் போல் வேலை செய்தார்கள். எல்லோருக்கும் நன்றி.” என்று கூறினார்