பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ், அடுத்து தனுஷை வைத்து கர்ணன் என்கிற படத்தையும் இயக்கி முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின், பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார்.
இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர வேடத்திலும் வடிவேலு வெளுத்து வாங்கியுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் ஏற்கனவே கூறியுள்ளனர்.
இந்த படம் வடிவேலுக்கு மீண்டும் ஒரு கம் பேக் கொடுக்கும் படமாக அமையும் என அவரது ரசிகர்கள் மட்டுமல்ல வடிவேலுவே கூட ஆவலுடன் எதிர்பார்க்கிறார்.
சமீபத்தில் வெளியான அவரது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்காத நிலையில் தற்போது மாமன்னன் படத்தை முழுமூச்சாக நம்பியுள்ளார் வடிவேலு.
விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் தனக்கான காட்சிகளுக்கு தற்போது டப்பிங் பேச துவங்கியுள்ளார் வடிவேலு.
தானும் வடிவேலுவும் டப்பிங் தியேட்டரில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.