இயக்குனர் செல்வராகவன் படங்கள் எப்போதுமே தனித்துவமானவை. அவரது படங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரது படங்களில் அவர் காட்டும் கதாபாத்திரங்களை வைத்து அவர் இப்படித்தான் என ரசிகர்கள் அவரை ஒரு சீரியஸ் மனிதராகவே உருவகப்படுத்திக்கொண்டு உள்ளனர். அதற்கேற்றபடி அவரும் பொதுவெளியில் பெரிதாக மனம் திறந்து பேசியது இல்லை.
அதே சமயம் சமீபத்திய பீஸ்ட், பகாசுரன் ஆகிய படங்களில் அவரது நடிப்பில் நகைச்சுவை அதிகம் இழையோடி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு நபருக்கு அதிகம் நண்பர்கள் இருந்தாக வேண்டும். ஆனால் செல்வராகவனோ தனக்கு நண்பர்கள் என யாரும் இல்லை என்று ஒரு அதிர்ச்சியான தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்” என்று சற்று விரக்தி மேலிட கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாகவே இயக்குனர் செல்வராகவன் இதுபோன்று அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் உறவு, நட்பு, பாசம், வேலை குறித்தெல்லாம் தத்துவ ரீதியாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.