அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழக வாசகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒன்று. இந்த நாவலை எம் ஜி ஆர், கமல் ஆகியோர் படமாக்க முயற்சித்து முடியாமல் போன நிலையில் இயக்குனர் மணிரத்னம் இந்த கதையை இரண்டு பாகங்களாக இயக்கி அதன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் 500 கோடிக்கு மேல் வசூலித்து வாகை சூடியது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளை கொஞ்சம் கொஞ்சமாக துவக்கி உள்ளனர் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்.
அந்த வகையில் இந்த படத்தின் முக்கிய மூன்று கதாபாத்திரங்களில் நடித்த ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் மூவரும் பேசிய ஒரு நிமிட புரமோஷன் வீடியோ ஒன்றை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த புரமோஷன் வீடியோவுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என சிலர் சந்தேகங்களை எழுப்பி வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இப்போதிருந்தே படத்துக்கு புரமோசனை துவங்கி விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.