சொல்வதற்கு சற்றே சங்கடமாக இருந்தாலும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். இந்தியாவில் உள்ள அதிகம் மது விற்பனை செய்யப்படும், அதிக மது பிரியர்கள் இருக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பது கசப்பான உண்மைதான். இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழகத்தை இதற்கு முன் ஆண்ட, தற்போது ஆளுகின்ற கட்சிகள், எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது குரல் கொடுத்தாலும் ஆளுங்கட்ச்சியாக மாறியபின் அந்த விஷயத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டன.
இந்த நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போதையற்ற தமிழகம் என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்து அதன் ஒரு பகுதியாக ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து வேட்டையை நடத்தி வருகிறது.
இந்த கையெழுத்து வேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர்கள் விஜய்சேதுபதி, கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்களை இணைத்துக்கொண்டு கையெழுத்திட்டு போதை இல்லா தமிழகம் உருவாக தங்களது ஆதரவை அளித்தனர்.
இந்த நிலையில் மது உள்ளிட்ட போதைப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து தொடர்ந்து அவ்வப்போது மேடை தோறும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இந்த கையெழுத்து பிரச்சாரத்திற்கு ஆதரவு குழு கொடுத்து தானும் இதில் கையெழுத்து விட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே இந்த போதைக்கு எதிரான பிரச்சாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இட்டுள்ளதால் இது வரும் காலத்தில் அரசியல் ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி போதையில்லா தமிழகம் உருவாக ஒரு புதிய வழி கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.