எண்பதுகளில் ரசிகர்களின் ஆதரவுடன் மக்கள் நாயகன் ஆக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெள்ளிவிழா படங்களில் நடித்த அவர் பாமர மக்களோடு மக்களாக எப்போதுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அரசியலில் நுழைந்து எம்பி பதவியையும் கைப்பற்றினார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 10 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தில் கதாநாயகனாகவே நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஆர். ராகேஷ் என்பவர் இயக்கி வருகிறார்.
அதுமட்டுமல்ல 90களில் ராமராஜன் படங்களில் பெரும்பாலும் அவரது வெற்றிக்கு துணை நின்ற இசைஞானி இளையராஜா தான் இந்த படத்திற்கு தற்போது இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் ராமராஜன் தவிர ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த படத்தின் டைட்டில் தங்களுக்கு தான் சொந்தம் என வேறு ஒரு பட நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதையடுத்து தற்போது சாமானியன் படத்தை தயாரித்துவரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான வி மதியழகன் தங்களிடம் உள்ள ஆதாரங்கள், இந்த படத்திற்கான வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தனது வழக்கறிஞர் விஜயன் மூலமாக அறிவிப்பூர்வமாக வாதாடி இந்த படத்தின் டைட்டிலை சட்டபூர்வமாக தனக்கு சொந்தமாக்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இப்படி இந்த டைட்டில் பிரச்சனை, அதிலும் குறிப்பாக மிகப்பெரிய படங்கள் வெளியாகும்போது, அந்த பட அறிவிப்பு வெளியான சமயத்திலேயே இதுகுறித்து எந்த தகவலையும் வெளிப்படுத்தாமல் படம் வெளியாகும் கடைசி நேரத்தில் வேண்டுமென்றே டைட்டில் தங்களுக்கு தான் சொந்தம் என்று இதுபோன்ற பலரும் அவ்வப்போது கிளம்பி வருகிறார்கள்.
இன்னும் நான் கேள்விப்பட்ட வகையில் இப்படி இந்த டைட்டில் விவகாரத்தை வைத்து திரையுலகில் உள்ள ஒருசிலர் பிரச்சனை எழுப்பி அதை வியாபாரமாக்கி அதன்மூலம் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
இதற்கு தயாரிப்பாளர் சங்கம் மூன்றாக பிரிந்து இருப்பதும் பலரும் இந்த மூன்று பிரிவுகளில் தங்களுக்கு தோதான ஏதோ ஒன்றில் டைட்டிலை பதிந்து கொள்வதும் தான் இந்த பிரச்சனை மிகப்பெரிய அளவில் தலை தூக்குகிறது. இதற்கு சங்கங்கள் மூன்றும் ஒன்றாக இணைந்து ஆன்லைனில் டைட்டில் பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வந்தால் மட்டுமே இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்” என்று கூறினார்