விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தனது தோற்றத்தையே வித்தியாசமாக மாற்றிக்கொண்டு விஷால் நடித்து வரும் இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பொதுவாகவே விஷால் நடிக்கும் படங்களில் மிகப்பெரிய அளவு ரிஸ்க் எடுத்து நடிப்பார். கடந்தமுறை வெளியான அவரது லத்தி படத்தில் கூட சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதேசமயம் தற்போது நடித்து வரும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் வேறு விதமான விபத்தில் சிக்க இருந்த விஷால் மற்றும் படக்குழுவினர் சிலர் மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பினர்.
லாரி ஒன்று வேகமாக வரும் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தபடி சொன்ன இடத்தில் லாரி நிற்காமல் மேலும் முன்னோக்கி வந்து செட்டில் அமைக்கப்பட்டிருந்த சுவரில் மோதி நின்றது. லாரி வேகமாக வருவதை உணர்ந்து அனைவரும் விலகி ஓடி தப்பித்தனர்.
இதுகுறித்து ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள விஷால் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் சில வினாடிகளில் பெரும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளேன் கடவுளுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.