கடந்த சில வருடங்களாகவே கே ஜி எஃப், கே ஜி எஃப் 2, காந்தாரா என கன்னட திரை உலகில் இருந்து வெளியாகும் திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்று வசூலையும் வாரி குவித்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே சுதீப் நடித்த விக்ராந்த் ரோனா மற்றும் சிவராஜ் குமார் நடித்துள்ள வேதா ஆகிய படங்கள் இதேபோன்று பான் இந்தியா திரைப்படங்களாகவே உருவாகின.

இந்த நிலையில் பிரபல கன்னட இயக்குனரும் நடிகருமான உபேந்திரா கதாநாயகனாக நடிக்க, மிக முக்கிய வேடத்தில் கிச்சா சுதீப் இணைந்து நடித்துள்ள கப்ஜா என்கிற திரைப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஸ்ரேயா கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் ஆர் சந்துரு இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அலங்கார் பாண்டியன் சமீபத்தில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது “நாங்கள் பெரிய பெரிய படங்களைத்தான் தயாரித்து வருகிறோம். அந்த வகையில், கப்ஜா படமும் மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது. இந்த படம் தயாரிப்பில் இருக்கும் போது இயக்குநர் சந்துரு என்னை அணுகினார், அப்போது அவர் படத்திற்கான செட் உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தார். அதையெல்லாம் பார்த்து நான் மிரண்டு விட்டேன். இவ்வளவு பெரிய படமாக உருவாகிறதே என்று ஆச்சரியப்பட்டுதான் சந்துருவுடன் இணைந்தேன்.

’கப்ஜா’ படத்தின் டிரைலரைப் பார்த்து சிலர் கே.ஜி.எப் படத்துடன் ஒப்பிடுவார்கள், நான் படத்தைப் பார்த்துவிட்டேன், இங்கு இதை நான் சொல்வது அதிகபட்சமாக உங்களுக்கு தெரியும் – ஆனால் அது தான் உண்மை. ‘கே.ஜி.எப்’ படத்தை விட ‘கப்ஜா’ மிகப்பெரிய படமாகவும், மிரட்டலாகவும் இருக்கும். நிச்சயம் இந்தப் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெறும்.” எப்ன்று கூறியுள்ளார்..