இந்திய திரைகயுலகமே தற்போது இயக்குனர் ஷங்கரின் படப்பிடிப்புகளை தான் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது. காரணம் ஒரு படத்தை எடுத்துக்கொண்டால் அந்தப் படத்தை நின்று நிதானமாக முடித்து ரிலீஸ் செய்து அதன் பிறகே அடுத்த படம் குறித்த வேலைகளில் ஈடுபடுவார் இயக்குனர் ஷங்கர். அப்படித்தான் அவர் இந்தியன் 2 படத்தையும் கமல்ஹாசனை வைத்து ஆரம்பித்தார்.

கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு நின்றது. அந்த படப்பிடிப்பு மீண்டும் துவங்க தாமதமாகும் என நினைத்து தான் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை துவங்கி இயக்க ஆரம்பித்தார் ஷங்கர்.

அதேசமயம் விக்ரம் படம் வெளியாகி கமலின் மார்க்கெட் மீண்டும் உச்சத்தை தொட்டதும் இந்தியன் 2 பரப்பிடிப்பை துவங்க வேண்டிய ஒரு கட்டாய தருணமும் ஏற்பட்டு விட்டது.

இதைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் படங்களை மாறி மாறி இயக்கி வருகிறார் ஷங்கர். கடந்த பத்து நாளைக்கு முன்பு தான் ராம்சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் படமாக்கி வந்தார் ஷங்கர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளார் ஷங்கர். அந்த வகையில் தற்போது சென்னையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஷங்கர்.

கடந்த முறை ஹைதராபாத்தில் ராம்சரண் படப்பிடிப்பிலிருந்து தன்னுடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டது போல தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பிலிருந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார் ஷங்கர். இந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது.