V4UMEDIA
HomeReviewவாத்தி ; விமர்சனம்

வாத்தி ; விமர்சனம்

தனுஷ் முதன்முதலாக ஒரு தெலுங்கு இயக்குனர் டைரக்ஷனில் நேரடி தெலுங்கு படமாகவே நடித்து தமிழிலும் வெளியாகி உள்ள படம் வாத்தி. வாகை சூடவா சாட்டை என கல்விக்கூடங்களை மையப்படுத்தி வெளியான படங்களின் வரிசையில் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு உருவாகியுள்ள இந்த படம் எந்த விதத்தில் தனித்து நிற்கிறது.. பார்க்கலாம் ?

கதை 90களில் இறுதியில் நடக்கிறது. மெடிக்கல் இன்ஜினியரிங் இந்த இரண்டு படிப்புகள் தான் உயர்ந்தது என சொல்லப்பட்டு வந்த சமயத்தில் தனியார் பள்ளிகளும் கோச்சிங் சென்டர்களும் புற்றீசல் போல பெருக ஆரம்பிக்கின்றன. அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை இல்லாமல் நிறைய பள்ளிகளை மூட அரசு நினைக்கிறது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆதலால் தனியார் பள்ளிகளை கட்டுக்குள் கொண்டு வந்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கிறது.

அரசாங்கம் தங்களுக்கென ஒரு குறைந்த கட்டணத்தை நிர்ணயத்து விட்டால் தங்களால் கொள்ளையடிக்க முடியாமல் போய்விடும் என நினைக்கும் தனியார் பள்ளி முதலாளியான சமுத்திரக்கனி அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அரசு பள்ளிகளுக்கு தாங்களே தங்களது ஆசிரியர்களை அனுப்பி தனியார் பள்ளி போல கல்வியை மேம்படுத்த உதவுகிறோம் என ஒரு அறிவிப்புடன் தானாகவே வந்து நுழைகிறார்.

அரசு அதை ஏற்றுக்கொள்ள இவர் தன்னிடம் உள்ள பயிற்சி ஆசிரியர்களை மட்டுமே தேர்வு செய்து அப்படி மூடப்படும் நிலையில் இருக்கும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார். எந்த வகையிலும் அந்த பள்ளிகளின் தரம் உயர்ந்து விடக்கூடாது, அதை காரணம் காட்டிய தனியார் பள்ளிகளில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் அவர் இப்படி அனுப்பி வைக்கும் வாத்தியார்களில் ஒருவராக தனுஷும் ஆந்திர தமிழக எல்லையில் உள்ள சோழவரம் என்கிற பள்ளிக்கு செல்கிறார்.

ஆனால் குடும்ப சூழல், பழமையான கலாச்சாரங்கள் காரணமாக பத்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடத்திற்கு வராத, வர மறுக்கும் மாணவர்கள் அனைவரையும் தனது திறமையால் ஒன்று திரட்டி படிக்க வைத்து பிளஸ் ஒன் வகுப்பில் அனைவரையுமே தேர்ச்சி பெற வைக்கிறார் தனுஷ். இது அவரை அனுப்பி வைத்த முதலாளி சமுத்திரக்கனிக்கு பேரதிர்ச்சி அளிக்கிறது

அவர் தனுஷை தன்னுடைய பள்ளிக்கே வந்து விடுமாறும் அதிக சம்பளம் தருவதாகவும் கூறி ஆசை காட்டுகிறார். அதற்கு தனுஷ் மறுக்க அவரை சோழவரம் பள்ளியிலிருந்து நீக்குவதற்கு ஏற்பாடு செய்கிறார் சமுத்திரக்கனி. இதனால் மீண்டும் அந்த பள்ளி மூடப்படும் நிலை ஏற்படுகிறது. ஒரு தனி மனிதனாக நின்று, கல்வி முதலையான சமுத்திரக்கனியை எதிர்த்து இந்த மாணவர்களின் எதிர்காலத்தில் தனுஷால் ஒளியேற்ற முடிந்ததா என்பதை மீதி கதை.

கலை உலக மார்க்கண்டேயன் என்று இதுவரை நடிகர் சிவக்குமாரை சொல்லி வருகிறார்கள். இனி அடுத்ததாக அந்த பட்டம் தனுஷுக்கு தான் செல்லும் என உறுதியாக சொல்லலாம். அந்த அளவிற்கு வாத்தியாராக, இல்லையில்லை.. இன்னும் பள்ளி மாணவன் போலவே காட்சியளிக்கிறார் நடிப்பு அசுரன் தனுஷ். ஒரு இளம் ஆசிரியராக துடிப்பும் ஆர்வமுமுமாக தனது துறையில் முன்னேற வேண்டும், மாணவர்களுக்கு நல்ல கல்வியை கற்பிக்க வேண்டும் என்கிற அவரது கதாபாத்திர ஆசையை படம் முழுக்க தனது நடிப்பில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

தான் அனுப்பப்பட்ட நோக்கமே வேறு விதத்திற்காகத்தான் எனக்குத் தெரிய வரும்போது தனது குமுறலை வெளிப்படுத்துவதுடன் மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் நடத்தும் வெவ்வேறு வகையான போராட்டங்கள் நிச்சயம் நம் மனதை நெகிழ வைக்கின்றன.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட காஞ்சிபுரம் பகுதியில் ஒரு பள்ளி ஆசிரியர் மாறுதலாகி செல்வதை கூட அந்த மாணவர்கள் அனுமதிக்காமல் அவரை கட்டிப்பிடித்து அழுது கொண்ட சம்பவம் நிஜத்தில் நடந்தது. அப்படி ஒரு கதாபாத்திரமாக தனுஷ் நம் மனதில் நிறைந்து நிற்கிறார்.

கதாநாயகியாக சம்யுக்தா.. சமந்தாவின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் தாராளமாக இவரை அணுகலாம் என்பது போன்று எந்நேரமும் புன்னகை ததும்பும் அழகான முகம், பாந்தமான நடிப்பு என அந்த டீச்சர் கதாபாத்திரத்திற்கு அருமையாக செட்டாகி இருக்கிறார். வலுவான நாயகி கதாபாத்திரம் கொண்ட கதைகளை உருவாக்கும் படைப்பளிகள் தாராளமாக சம்யுக்தாவை தேடிப்போகலாம்.

பள்ளி முதலாளியாக சமுத்திரக்கனி.. பெரும்பாலும் அவரை நல்ல ஆசிரியராக, மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என போராடுபவராக பார்த்தே பழகி விட்டதால், இந்த படத்தில் கல்வி முறைக்கு எதிராக அவர் காட்டும் வில்லத்தனம் கலந்த நடிப்பு நன்றாக இருந்தாலும் நம் மனதில் ஒட்ட மறுக்கிறது.

கிராமத்தில் பெண்களுக்கு எதற்கு படிப்பு என்ற மனோபாவத்துடன் செல்வந்தராக இருக்கும் சாய்குமார் கொஞ்சம் கொஞ்சமாக தனது மகளின் படிப்பிற்காக, தனது குணங்களை மாற்றிக்கொள்ளும் ஒரு எதார்த்தமான கதாபாத்திரத்தில் நீண்டநாளைக்கு பிறகு ரசிக்க வைத்துள்ளார்.

அசுரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கென் கருணாஸ் தனக்கு கிடைத்த வாய்ப்பை இந்த படத்திலும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். நகைச்சுவைக்காக இணைக்கப்பட்ட ஷாரா பெரிய அளவில் இந்த படத்திற்கு கை கொடுக்கவில்லை. மற்றபடி படத்தில் நடித்துள்ள பல கதாபாத்திரங்கள் கதைக்கு ஏற்ற நடிப்பை வழங்கி இருந்தாலும் சில கதாபாத்திரங்கள் நமக்கு அன்னியமாக தெரிகின்றதையும் மறுப்பதற்கு இல்லை.

படத்திற்கு உயிர் நாடியான இசையையும் பாடல்களையும் வழங்கியுள்ளார் ஜீவி பிரகாஷ் குமார். குறிப்பாக அடியாத்தி என்கிற பாடல் ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறது. கடந்த காலத்தில் கல்வி முறையில் நடந்த ஒரு மோசமான மாற்றத்தை கதையாக உருவாக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி அதை படமாக்கும் விதத்தில் 90 சதவீதம் சாதித்து இருந்தாலும் 10% நிகழ்காலத்தில் நடக்கும் விஷயங்களையும் தன்னை அறியாமலேயே உள்ளே புகுத்தி உள்ளார் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்/

அந்தவகையில் கல்விமுறையில் இதுபோன்ற மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்கிற உணர்வை ஏற்படுத்தி உள்ளாரே தவிர மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறி விட்டார்.

மற்றபடி வாத்தி சரியாகவே பாடம் எடுத்துள்ளார்

Most Popular

Recent Comments