இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனாக நட்சத்திர வீரராக உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் மகேந்திர சிங் தோனி. தற்போது சினிமாவிலும் இறங்கி ஒரு கை பார்த்து விடலாம் என முடிவு செய்து அதுவும் தமிழில் தனது முதல் படத்தை தயாரிக்கிறார்.
எல்ஜிஎம் அதாவது லெட்ஸ் கெட் மேரீட் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, லவ் டுடே புகழ் கதாநாயகி இவானா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.
யோகிபாபு சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர். பள்ளிக்காக விளையாடி சாம்பியன்ஷிப் பட்டம் கூட வென்றவர். சினிமாவில் நுழைந்த பின்னும் கூட படப்பிடிப்பு இல்லாத நாட்களில், படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாவது உண்டு.
அந்த வகையில் தீவிர கிரிக்கெட் ரசிகரான யோகிபாபுவுக்கு படத்தின் தயாரிப்பாளரும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான தோனியிடமிருந்து எதிர்பாராத சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது தான் பயிற்சிக்காக பயன்படுத்திய கிரிக்கெட் பேட் ஒன்றை யோகிபாபுவுக்கு பரிசளித்திருக்கிறார் தோனி. இதை மகிழ்ச்சியுடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் யோகிபாபு.