பொதுவாக சினிமாவில் வாரிசு நட்சத்திரங்களாக அறிமுகமாகும் ஹீரோக்கள் நிலைத்து நிற்பதுபோல ஹீரோயின்களால் திரையுலகில் நிற்க முடிவதில்லை. அவர்கள் திரையுலகில் நுழைவதற்கு அடித்தளமாக அவர்களது பெற்றோர் இருந்தாலும் தங்களது நடிப்புத்திறமையாலும் கதைகளை தேர்ந்தெடுக்கும் விதத்தாலும் மட்டுமே நீண்ட நாட்கள் அவர்கள் திரையுலகில் பயணிக்க முடியும்.
அப்படி பயணித்து வரும் நட்சத்திர வாரிசுகளில் குறிப்பாக நடிகைகளின் குறிப்பிடத்தக்க சிலரே உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் சரத்குமார் மகளான வரலட்சுமி. தாரை தப்பட்டை படத்தின் மூலம் அவரது நடிப்புத்திறமை பளிச்சென வெளிப்பட்டதும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
தமிழிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் தற்போது தெலுங்கில் தான் அவர் அதிக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்துள்ள கொன்றால் பாவம் என்கிற படம் விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கிறது.
தெலுங்கில் ஏன் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் தமிழில் அதிக வாய்ப்பு கிடைத்தால் ஏன் நான் தெலுங்கில் நடிக்கப் போகிறேன் தமிழில் என் திறமையை மதிப்பதில்லை. அதேசமயம் தெலுங்கில் என் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களாக தேடி வருகின்றன.
எனக்குரிய மரியாதை அங்கே கிடைக்கிறது. கடந்த வருடம் நான் கிராக் என்கிற படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நான் நடித்த ஜெயம்மா என்கிற கதாபாத்திர பெயரை வைத்து என்னை ரசிகர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு தெலுங்கு திரையுலகம் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
தெலுங்கில் இப்போது வாய்ப்புகள் வருவதால் அதில் அதிகம் நடிக்கிறேன். தமிழில் வாய்ப்புகள் வந்தால் அங்கேயும் தொடர்ந்து நடிக்கத்தான் போகிறேன் என்று கூறியுள்ளார்.