கடந்த வருடம் வெளியான படங்களில் பொன்னியின் செல்வன், விக்ரம் விருமன், சர்தார் என பிரம்மாண்ட படங்கள் ஒருபக்கம் வெற்றி பெற்ற நிலையில் சிறிய பட்ஜெட்டில் உருவான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் வாரி குவித்தது திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல தியேட்டர் வட்டாரங்களிலும் மிகப்பெரிய வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கோமாளி என்கிற நூறு நாள் படத்தை கொடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது தானே இந்த படத்தை நடித்து இயக்கி இந்த படத்தையும் 100 நாட்கள் என்கிற சாதனையை செய்ய வைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் 100-வது நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இயக்குனர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, இந்த படத்தின் இசையை பொறுத்தவரை எனது குழுவிற்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியர் பிரதீபிற்கும் எனது நன்றி. இந்த படத்தின் கதையை கேட்டவுடன், இது ஹிட் என்று நான் முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த படம் AGS-க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறது என்றார்.

அதேபோல பிரதீப் ரங்கநாதனை தான் தயாரித்த கோமாளி படம் மூலமாக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசும்போது சினிமாவில் பல ஆண்டுகளாக 100 நாள் நிகழ்ச்சி இல்லை. AGS இப்போது அதை செய்து இருக்கிறார்கள். அதில் நான் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. பிரதீப் உடைய முதல் படத்தை நான் தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அதுவும், நூறு நாள், இதுவும் நூறு நாள், இதுபோன்று தொடர்ந்து அவர் பல வெற்றிகளை குவிக்க வேண்டும். பிரதீப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

நாயகன் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது ஒரு புதுமுகத்தை நாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க பலர் முன் வர மாட்டார்கள். ஆனால் AGS அதற்கு முன் வந்தார்கள். அதோடு அவர்கள் எனக்கு இந்தப்படத்தின் உருவாக்கத்தில் பெரும் சுதந்திரம் தந்தார்கள். அதற்கு ஒட்டுமொத்த AGS குழுவிற்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படத்தின் இசையை பொறுத்தவரை யுவன் சாரிடம், நிறைய விஷயங்களில் கூடுதலாக, ஈடுபாட்டுடன் இயங்கினேன். யுவன் சார் மிக அற்புதமான இசயை தந்தார். அடுத்ததாக எனது தொழில்நுட்பக்குழு, அவர்களது பணி அளப்பறியது. அவர்களும் நடிகர்களும் இந்தப் படத்தை மேம்படுத்தினார்கள். அதன் பிறகு மக்கள் கொடுத்த ஆதரவில் தான் இந்த படம் பெரிய படமாக மாறியது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கொள்கிறேன்.” என்று கூறினார்.