தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 150 படங்களுக்கு மேல் வெளியாகின்றன. இதில் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் அந்த படத்தின் கதை நன்றாக இருந்தும், பல இயக்குனர்களின் அனுபவம் இன்மையால் திரைக்கதை சரியாக அமைக்கப்படாமல் தோல்வியை தழுவுகின்றன. தயாரிப்பாளர்களுக்கும் கதை பிடித்து போனாலும் கூட, திரைக்கதை பற்றிய எந்த ஒரு ஐடியாவும் இல்லாததால் இந்த தோல்வி தவிர்க்க முடியாததாகி மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
இந்த நிலையில் இதற்கு ஒரு தீர்வு காணும் விதமாக பாடலாசிரியர் மகன் கார்க்கியும் தயாரிப்பாளர் தனஞ்செயனும் இணைந்து ஸ்கிரிப்டிக் என்கிற திரைக்கதை வங்கி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் படைப்பாளிகள் தங்களது படத்திற்கான திரைக்கதைகளை இந்த வங்கியில் ஒப்படைத்து விட்டால் சினிமா குறித்து ஆழ்ந்த அனுபவம் உள்ள இயக்குனர்கள், கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கதை வல்லுனர்களால் ஒவ்வொருவரின் திரைக்கதையும் படித்து அலசப்பட்டு எந்த திரைக்கதை படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் தருமோ அந்த திரைக்கதைகளை பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் திறமையான படைப்பாளிகளுக்கு வாய்ப்பு பெற்று தரும் பணியை தான் இந்த ஸ்கிரிப்டிக் செய்ய இருக்கிறது.
அது மட்டுமல்ல தயாரிப்பாளர்களும் இதுபோன்று பல கதைகளை கேட்டு சலித்துப்போய் ஏதோ ஒரு கதையை எடுத்து நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவதற்கு பதிலாக இப்படி வெற்றிக்கு உத்தரவாதம் உள்ள திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்க முன்வரும்போது அவர்களுக்கான நேரமும் பணமும் விரயமாவது தவிர்க்கப்படுவதுடன் படம் வெளியாகும்போது வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகளும் அதிகமாக இருக்கும்.
இந்த முயற்சி நல்ல கதைகளை வைத்துக்கொண்டு வாய்ப்பு கிடைக்காத இயக்குனர்களுக்கும் ஒரு வரப் பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை