தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களை மட்டும் எப்போதும் புரிந்து கொள்ளவே முடியாது. அவர்களில் சிலர் தான் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் ராம் இருவரும்.

எப்படி தொடர்ந்து தனுஷ் படங்களை மட்டுமே இயக்கி வந்த வெற்றிமாறன் யாரும் எதிர்பாராத விதமாக நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்கிற படத்தை இயக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாரோ, அதேபோல இயக்குனர் ராமும் இதற்கு முன்னதாக பேரன்பு படத்தில் மம்மூட்டியையும் தற்போது அவர் இயக்கி முடித்துள்ள ஏழு கடல் ஏழுமலை என்கிற படத்தில் மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலியையும் வைத்து படம் இயக்கினார்,

அதைத்தொடர்ந்து தற்போது நகைச்சுவை கதாநாயகனாக வலம் வரும் மிர்ச்சி சிவாவை வைத்து தனது புதிய படத்தை தொடங்கியுள்ளார் இயக்குனர் ராம். உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி வரும் ராமின் இந்த அறிவிப்பு திரையுலகிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்னும் பெயரிடப்படாத இந்த படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சிவா நடிப்பில் உருவாகியுள்ள காசேதான் கடவுளடா, சுமோ உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.