இயக்குனர் ஷங்கர் தற்போது ஒருபக்கம் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தையும் இன்னொரு பக்கம் தெலுங்கில் நடிகர் ராம் சரணை வைத்தும் படங்களை இயக்கி வருகிறார். ராம்சரண் படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.
பாலிவுட் நடிகையாக இருந்தாலும் ஷங்கரின் டைரக்ஷனில் நடிப்பதால் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் கியாரா அத்வானி. இவருக்கும் பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த் மல்கோத்ரா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதேசமயம் ராம்சரண் அவரது மனைவி உபாசனா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் நேரில் கலந்து கொள்ளாவிட்டாலும் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலமாக தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாகவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில், ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஜோடியை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் திருமணமாக இவர்கள் நட்சத்திர திருமணம் அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.