விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் படங்களில் ஒன்று ரெய்டு. விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா & அனந்திகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் கார்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கன்னடத்தில் உருவான டகரு என்கிற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி உள்ளது.
இந்த படத்தை பார்த்துவிட்டு இதன் கன்னட உரிமையை வாங்கலாம் என இந்த ரெய்டு பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்தபோது அதன் உரிமையை ஏற்கெனவே இயக்குனர் முத்தையா வாங்கி விட்டார் என்கிற தகவல் தெரியவந்தது.
அதன் பிறகு முத்தையாவை வைத்து அந்த படத்தின் தமிழ் ரீமிக்கை இயக்கி விடலாம் என முடிவு செய்தபோது அவர் கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கும் வேலைகளில் பிஸியாக இருந்தார். இந்த படத்தை ரீமேக் செய்வதற்கு ரெய்டு பட தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருந்ததை பார்த்ததும் தனது உதவியாளரான கார்த்தி என்பவரை வைத்து இந்த படத்தை இயக்குங்கள் எனக் கூறி இதன் ரீமேக் கூறிமையை இவர்களுக்கு கைமாற்றிவிட்டார் முத்தையா.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர்கள் கூறும்போது இயக்குநரை முதலில் நாங்கள் பார்த்தபோது அவர் இளமையாக இருந்தார். ஆனால், அவரது கதை சொல்லலில் அவர் ஒரு தேர்ந்த கதை சொல்லி இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார்.
கதையை நாங்கள் இறுதி செய்த பிறகு இதில் நடிப்பதற்கு விக்ரம் பிரபு சார் மிகச்சரியாக பொருந்திப் போவார் என முடிவு செய்தோம். அவரை அணுகி பேசியபோது, அவர் உடனே சம்மதம் தெரிவித்தார். அவர் இதற்கு முன்பு பல ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அதில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் மேலும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்” என்றார்.