கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை விக்ரம் பிரபுவின் திரையுலக பயணத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டிருந்தது. ஆனால் கடந்த வருடம் வெளியான டாணாக்காரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மீண்டும் அவரை ஏணியில் ஏற்றி விட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த வருடம் வெளியாகும் அதன் இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பாயும் ஒளி நீ எனக்கு மற்றும் ரெய்டு ஆகிய படங்களிலும் நடித்து முடித்துவிட்டார். இந்த படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

இந்த நிலையில் மாயா, மாநகரம், மான்ஸ்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் இறுகப்பற்று என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விக்ரம் பிரபு.
வடிவேலு கதாநாயகனாக நடித்த எலி தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இந்த படத்தை இயக்குகிறார் இதில் கதாநாயகியாக சதா ஸ்ரீநாத் நடிக்கிறார். இவர்களுடன் விதார்த், சானியா ஐயப்பன், அபர்னதி, ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.