தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் பாடல்களுடன் இந்தப்படத்திற்கு முதன்முதலாக வசனமும் எழுதியுள்ளார்.
தமிழில் வெளியாகி இரண்டு தினங்கள் கழித்து தற்போது தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் வெளியாகி உள்ள இந்த படம் அங்கேயும் அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டனர்
இசையமைப்பாளர் தமன் பேசும்போது, “இவ்வளவு பெரிய ஸ்டார் நடித்துள்ள படத்தில் ஒரு அம்மா பாடலை இரண்டரை நிமிடத்திற்கு மேல் வைத்து உணர்வு பூர்வமாக அதை அனைவரும் ரசிக்கும்படி செய்துள்ளார் இயக்குனர் வம்சி. இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானபோதே, ஏற்கனவே மாஸ்டர், பீஸ்ட் படங்களில் இசையமைப்பாளர் அனிருத் பிரித்து தள்ளிவிட்டார் அதை தாண்டி நாமும் ஏதாவது பண்ணி ஆகணுமே என்கிற எண்ணம் மனதில் ஏறிவிட்டது. வெற்றி என்பது உடலில் ஓடும் ரத்தம் மாதிரி. அது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று கூறினார்.