எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா.
தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா, செலக்டிவான படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
அந்தவகையில் கண்ணே கலைமானே, பக்ரீத் ஆகிய படங்களைத் தொடர்ந்து இவர் நடித்துள்ள கண்ணை நம்பாதே மற்றும் தலைக்கூத்தல் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
இது பற்றி அவர் கூறும்போது லென்ஸ் படத்தை இயக்கிய ஜேபி (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) டைரக்ஷனில் தற்போது தலைக்கூத்தல் என்கிற படத்தில் நடித்துள்ளேன்.
சமுத்திரக்கனி, கதிர், வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சமுத்திரக்கனியின் ஜோடியாக நடித்துள்ளேன் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட போது சமுத்திரக்கனியின் நடிப்பைப் பார்த்து நாங்கள் அழுதது பலமுறை நடந்தது. அந்த அளவிற்கு உணர்வுப்பூர்வமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்டமான படங்கள் வெளியாகி, தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்று விட்டன. பேராண்மை படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கும் பொன்னியின் செல்வன் ஜெயம் ரவிக்கும் எவ்வளவோ வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.
பேராண்மையில் ரொம்ப கண்டிப்பானவராக காட்சியளித்தவர் இதில். இன்னும் பக்குவப்பட்ட ஒரு நடிகராக அந்த கதாபாத்திரத்திற்கு என அழகாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். இதுபோன்ற ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது.
2023ல் இன்னும் நிறைய ஓடிடி படங்கள் பண்ண வேண்டும். குறிப்பாக அதிக அளவில் மாடர்ன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்” என்று கூறுகிறார் வசுந்தரா..