தமிழில் உலகப்பொதுமறை என போற்றப்படும் பொக்கிஷமாக இருப்பது திருக்குறள் நூல். 133 அதிகாரங்களில் 1330 பாடல்களை எழுதி மொத்த மனித குலத்திற்கும் தங்களது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் தேவைப்படும் அனைத்து தத்துவங்களையும் உள்ளடக்கியது திருக்குறள்.
இதற்கு மறைந்த கலைஞர் கருணாநிதி உட்பட பலர் தெளிவுரை எழுதியுள்ளனர். அதேசமயம் தமிழ் திரையுலகில் மார்க்கண்டேயன் என அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் இதற்கு முன்னதாக கம்ப ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை மிக சுருக்கமாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக சொற்பொழிவு ஆற்றி சாதனை படைத்தவர்.
தொடர்ந்து தற்போது திருக்குறளிலும் புதிய யாருமே செய்யாத ஒரு முயற்சியை மேற்கொண்டு செய்துள்ளார். அதாவது திருக்குறளில் உள்ள 1330 குறள்களில் முக்கியமான 100 குறள்களை எடுத்துக்கொண்டு அந்த குறள் காட்டும் வழிமுறைப்படி இந்த சமூகத்தில் வாழ்ந்து மறைந்த, தற்போதும் வாழ்கின்ற சாதனையாளர்களின் நல்ல மனம் படைத்தவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் எப்படி ஒத்துப் போகின்றன என்பது குறித்து அழகாக உரையாற்றியுள்ளார்.
சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் இவர் இந்த 100 குறள்களுக்கும் பொருந்துகின்ற மனிதர்களை பற்றிய ஆச்சரிய கதைகளை சொற்பொழிவாக பேசி அசத்தினார்.
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பிற்பகல் 3 மணிக்கு மூன்று பகுதிகளாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதனைதொடர்ந்து புதுயுகம் தொலைக்காட்சியில் குடியரசு தினத்தன்று ஜனவரி 26 அன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரை பெருமைப்படுத்தும் விதமாக சிவகுமார் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.