கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் அஜய் ஞானமுத்து முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான படம் டிமாண்டி காலனி. அருள்நிதி கதாநாயகனாக நடித்து இருந்த இந்த முதல் படத்திலேயே வித்தியாசமான இயக்குனர் என பெயர் பெற்றார் அஜய் ஞானமுத்து.
அதைத்தொடர்ந்து இமைக்கா நொடிகள், கோப்ரா என மிகப்பெரிய நட்சத்திரங்களை வைத்து இயக்கும் வாய்ப்பையும் பெற்றார் அஜய் ஞானமுத்து. தற்போது தனது டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை அருள்நிதியை ஹீரோவாக வைத்து இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, ‘இருள் ஆளப்போகிறது’ என்ற போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த போஸ்டர்கள் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருப்பதில் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த போஸ்டர்களில் QR கோட் இருக்கிறது. இதை ஸ்கேன் செய்வதன் மூலம் படத்தின் முதல் பார்வையை ரசிகர்கள் பார்க்கலாம். இது போன்ற புது யுக்திகள் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
படத்தின் 40% படப்பிடிப்பு முதல் ஷெட்யூலுடன் முடிவடைந்து அடுத்த ஷெட்யூல் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது.