இறுதிச்சுற்று, விக்ரம்வேதா உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தலைக்கூத்தல். லென்ஸ் திரைப்படத்தை இயக்கிய ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க வசுந்தரா கதாநாயகியாக நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக பரியேறும் பெருமாள் கதிர் நடித்துள்ளார்.

இந்தப்படம் கிராமங்களில் தற்போதும் வெகு சில இடங்களில் வழக்கத்திலுள்ள தங்கள் வீட்டிலுள்ள வயதான பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டு சிரமப்படுவதை தவிர்க்கும் விதத்தில் அவர்களுக்கு தலைக்கூத்தல் என்கிற முறையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து அவர்களுக்கு இயற்கையான முறையில் உடனடி மரணம் ஏற்படுத்தும் ஒருவிதமான கருணைக்கொலையை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.