விஜய் முதன்முதலாக தெலுங்கு தயாரிப்பாளர் தெலுங்கு இயக்குனர் ஆகியோருடன் கூட்டணி அமைத்து நடித்துள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 11ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்தநிலையில் இந்த படத்திற்கு களை இயக்குனராக பணியாற்றிய சுனில் பாபு என்பவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். வாரிசு படக்குழுவினர் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகினர் இடையேயும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி புரடக்சன் டிசைனராக திரையுலகினரால் குறிப்பாக தயாரிப்பாளர்களால் அதிகமாக விரும்பப்படுபவராக இருந்தவர் சுனில் பாபு.

50 வயதாகும் சுனில்பாபு இந்த குறைந்த வயதில் இப்படி மரணத்தை தழுவியது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.