90களில் மக்கள் நாயகன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து வெள்ளிவிழா நாயகன் என்று கூட அழைக்கப்பட்டார். கடந்த பத்து பதினைந்து வருடங்களுக்கு மேலாக நடிப்பை விட்டு ஒதுங்கியிருக்கும் ராமராஜன் தற்போது சாமானியன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஆர் ராகேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இவர் தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தில் ராமராஜனுடன் எம்எஸ் பாஸ்கர், ராதாரவி ஆகியோர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஹைலைட்டாக 90களில் ராமராஜனின் வெற்றிக்கு துணை நின்ற இளையராஜா மீண்டும் இந்த சாமானியன் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் ராமராஜனுடன் கை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக இசைஞானி இளையராஜாவை நேரில் சென்று சந்தித்துள்ளனர் ராமராஜன், தயாரிப்பாளர் மதியழகன், இயக்குனர் ராகேஷ் மூவரும். அப்போது படத்தின் நிலவரம், படப்பிடிப்பு குறித்த தகவல்களை கேட்டறிந்தார் இசைஞானி இளையராஜா.

இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருப்பதாக இயக்குனர் ராகேஷ் கூறியதும், மொத்த படமும் முடிந்ததுமே தன்னுடைய இசைப்பணிகளை துவங்கி விடுவதாக அவர்களுக்கு உறுதி அளித்துள்ளார் இளையராஜா. விரைவில் அந்த 4 நாட்களுக்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கும் என தயாரிப்பாளர் மதியழகன் தெரிவித்துள்ளார்.