கொடைக்கானல் பகுதியை சேர்ந்த மலைகிராமம் ஒன்றில் தாயில்லா குழந்தையான தனது பேத்தி செம்பியை கண்ணுக்கு கண்ணாக பொத்தி பொத்தி வளர்க்கிறார் கோவை சரளா. செம்பிவாழ்வில் ஒரு நாள் மூன்று கல்லூரி இளைஞர்களின் உருவில் விதி விளையாடுகிறது சிறுமி என்றுகூட பாராமல் செம்பியை சூறையாடுகிறார்கள் அரசியல் பணபலம் செல்வாக்கு கொண்ட மூவரும். செம்பியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாக நடக்கிறார் கோவை சரளா.

உண்மை தெரிந்த போலீஸ் அதிகாரி பெரிய இடத்துப் பையன்கள் என்பதால் கோவை சரளாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பிரச்சனை பண்ண வேண்டாம் என கூறுகிறார். கோபத்தில் அவரை தாக்கிவிட்டு தனது பேத்தியுடன் ஊரைவிட்டு தப்பிப்பதற்காக ஒரு பேருந்தில் ஏறுகிறார் கோவை சரளா.
கொடைக்கானலில் இருந்து மலையை விட்டு கீழே இறங்கும் வரை ஆங்காங்கே கோவை சரளாவை பிடிப்பதற்காக போலீசார் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் பேருந்தில் பயணிக்கும் வழக்கறிஞர் அஸ்வின் ஆபத்பாந்தவனாக வருகிறார். செம்பிக்கு நீதி கிடைக்க இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டு தொழில்நுட்பத்தையும் சோசியல் மீடியாவையும் பயன்படுத்தி முயற்சி மேற்கொள்கிறார்.

இந்த பேருந்து பயணத்தில் பாட்டியையும் பேத்தியையும் கொல்வதற்கு சதிகார கும்பல் துரத்துகிறது. இதிலிருந்து கோவை சரளாவும் செம்பியும் தப்பித்தார்களா ? கயவர்களுக்கு தண்டனை கிடைத்ததா ? இவர்களுக்கு நீதி கிடைத்ததா என்பது மீதிப்படம்.
60 வயதுக்கு மேற்பட்ட கிழவியாக அதிலும் மலை கிராமத்தில் வசிக்கும் ஒரு அன்றாடங்காய்ச்சியாக கோவை சரளா அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். இத்தனை நாட்களாக நம்மை சிரிக்க வைத்த அவரா இவர் என்று கேட்கும் அளவிற்கு நகைச்சுவை என்பதே துளியும் இன்றி முழுக்க முழுக்க தனக்குக் கொடுக்கப்பட்ட சீரியஸான கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தள்ளாத வயதிலும் தனது பேத்தியை காக்க போராடும் வீரப்பெண்மணி ஆகவே நம் கண்களுக்குத் தெரிகிறார். பயம், வீரம், கோபம் என அனைத்து உணர்வுகளையும் நொடிக்கு நொடி மாற்றி பிரமிக்க வைக்கிறார்.

சின்னத்திரையில் புகழ்பெற்ற அஸ்வின் இந்த படத்தில் மிகவும் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கி ஆச்சரியமூட்டுகிறார். ஒரு பேருந்து பயணத்துக்குள்ளேயே அவரது காட்சிகள் முடிந்துவிட்டாலும் அதற்குள் அன்பு, சென்டிமென்ட், ஆக்ஷன் ஆவேசம் என விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தி பல படங்களில் நடித்த ஒரு தேர்ந்த நடிகர் போல காட்சியளிக்கிறார் அஸ்வின்.
இடைவேளைக்குப்பின் பஸ் கண்டக்டராக, அதே பஸ்ஸுக்கு ஓனர் ஆகவும் நடித்துள்ள தம்பி ராமையா சீரியசாக செல்லும் இந்த கதையில் அவ்வப்போது நம்மை தனது காமெடியால் ஓரளவு ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார். சிறுமி செம்பியாக நடித்திருக்கும் நிலா, தனக்கு நேர்ந்த கொடுமையை கூட சரியாக உணர முடியாமல் அதேசமயம் அதன் பாதிப்பை அழகாக வெளிக்காட்ட வேண்டிய சவாலான விஷயத்தையும் சரியாக செய்திருக்கிறார்.

பேருந்தில் ஏறும் வரை பாட்டிக்கும் பேத்திக்குமாக இருந்த கதைக்களம் அதன் பிறகு மொத்த மனிதர்களுக்கும் என மாறிவிடுகிறது. அரசியல்வாதியாக வரும் நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா வழக்கம்போல வந்து செல்கிறார்கள். கிளைமாக்ஸில் நீதிபதியாக வரும் ஞானசம்பந்தம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதாரம் காரணமாக நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாதே என்கிற பதைபதைப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
சமீப காலமாக பெருகி வரும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை பற்றி அழுத்தம் தரும் விதமாக இந்தபடத்தில் பேச முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமன். படத்தில் வழக்கம்போல காடும் மலைப்பிரதேசமும் பேருந்து பயணமும் என பிரபுசாலமனின் படத்திற்கே உண்டான அனைத்து அம்சங்களும் இந்த படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றன.
அதேசமயம் ஒரு பேருந்து பயணத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தங்கள் தேவைக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் குறித்த நேரத்திற்குள் பெற முடிகிறது என காட்சிப்படுத்தியிருப்பது நம்பும்படியாக இல்லை. ஆனாலும் இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று தான் நம் மனது விரும்புகிறது அதுதான் இந்தப் படத்தில் மிகப்பெரிய நகைமுரண்.
நிவாஸ் கே பிரசன்னா பின்னணி இசை, ஜீவனின் அழகான ஒளிப்பதிவு இரண்டும் சேர்த்து பிரபு சாலமன் மூலமாக நமக்கு மீண்டும் ஒரு அழகான மலைப்பயண அனுபவத்தை கொடுத்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்க வேண்டிய காவல்துறை, தவறு செய்தவர்கள் பக்கம் நிற்கும் ஏவல் துறையாக மாறியுள்ளதை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் பார்க்கும்போது இயல்பாகவே அவர்கள் மீது ஒரு கோபம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அருமையான கதைக்களம், நல்ல மெசேஜ்.. திரைக்கதையில் இன்னும் சற்று நம்பகத்தன்மையுடன் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.