பிரபல வங்கி கொள்ளை ஒன்றில் முக்கிய கொள்ளைக்காரன் உருவத்தை பார்த்த ஒரே சாட்சி கல்லூரி மாணவரான லிங்கேஷ். அவர் மிகப்பெரிய சாஃப்ட்வேர் புராஜெக்ட் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறார். அவரை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டு பிடிக்கலாம் என நினைக்கையில் அடுத்து இன்னொரு வங்கியும் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கிடையே கல்லூரியில் லிங்கேஷின் ஜூனியர் மாணவியான மோனிகா அவரை காதலிக்கிறார். ஆனால் மனதில் காதல் இருந்தாலும் தனது கல்வியில் கவனம் சிதற கூடாது என்பதால் காதலை ஒதுக்குகிறார் லிங்கேஷ்.
இந்த நிலையில் மூன்றாவதாக இன்னொரு வங்கியில் கொள்ளை முயற்சி நடக்கிறது. லிங்கேஷ் தனது காதலை ஒதுக்கியதற்கான நிஜமான காரணமும் இந்த கொள்ளை முயற்சிக்கான காரணமும் ஒரே நேரத்தில் நமக்குத் தெரிய வருகிறது.
இதன் பின்னணியில் ஏழை மாணவர்களுக்கான கல்வி மட்டுமல்ல, அந்த கல்வியை பெறுவதற்கு அரசாங்கம் வகுத்துக்கொடுத்துள்ள கல்விக்கடன் கூட எப்படி எட்டாக்கனியாக இருக்கிறது என்கிற அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது. லிங்கேஷின் பின்னணி, லிங்கேஷ் யார், அவர் ஏன் தன் காதலை மறுக்கிறார், இந்த வங்கிக் கொள்ளைக்கு சூத்திரதாரி யார் என்பதை கடைசி 20 நிமிட பிளாஷ்பேக் காட்சி விவரிக்கிறது.
முதன்மை நாயகனாக லிங்கேஷ். இந்தப்படத்தில் நல்ல முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவரது இயல்பான மேலும் அழுத்தம் கொடுக்கிறது. நாயகியாக மோனிகாவின் கதாபாத்திரம் சிறியது என்றாலும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்.
லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு. கல்லூரி நண்பராக வரும் அனந்த்நாக்கின் கேரக்டரும் அவரின் நடிப்பும் அருமையாக அமைந்துள்ளது. காமெடிக்கென தனி ட்ராக் இல்லாமல் நண்பர்களை வைத்தே கதையோடு இணைத்துள்ளார் இயக்குநர் ஜெய் அமர் சிங் . காமெடியில் ஒருவர் மட்டும் கவனம் ஈர்க்கிறார்.
யூத்புஃல்லாக ஆரம்பிக்கும் முன்பாதியில் ஒளிப்பதிவாளர் வண்ணங்களை அழகாக இணைத்து விஷுவலாக படத்திற்கு எனர்ஜி ஏற்றியுள்ளார். இசை அமைப்பாளர் தன் வேலை கச்சிதமாக கொடுத்துள்ளார். படத்தில் வரும் மிக முக்கியமான ப்ளாஸ்பேக் சீக்வென்ஸில் பின்னணி இசை அருமையாக அமைந்துள்ளது
எளியவர்களுக்கு கல்வி எட்டாக்கனி ஆகிவிடக்கூடாது என்ற கருத்தை தன் முதல் படத்திலே அக்கறையோடு பதிவு செய்த இயக்குநர் ஜெய் அமர் சிங் பாராட்டுக்குரியவர். சிறிய பட்ஜெட்டிலும் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் நம்பகத்தன்மையையும் மேக்கிங்கில் கொண்டு வந்தது நிச்சயமாக ஆச்சர்யம். ஒரு நல்ல கருத்தை தாங்கி வந்துள்ள காலேஜ்ரோடு நிச்சயமாக பார்க்க வேண்டிய படம்.