இந்த வருடத்தில் பொன்னியின் செல்வன் என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் குந்தவை என்கிற வரலாற்று நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை திருடி விட்டார் நடிகை திரிஷா. அதுமட்டுமல்ல அவர் திரையுலகில் நுழைந்து இந்த வருடத்தோடு 20 வருடங்களையும் பூர்த்தி செய்துவிட்டார்.
இத்தனை வருடங்கள் ஒரு தனி கதாநாயகியாகவே ஒரு நடிகை நடித்து வருகிறார் என்றால் அந்த சாதனைக்கு சொந்தக்காரர் திரிஷா ஒருவராகத்தான் இருப்பார்.
இந்த நிலையில் இந்த வருட இறுதியிலும் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என நினைத்தார் த்ரிஷா. அதற்கு ஏற்றபடி அவர் நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது.
எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருந்தாலும் இது ஒன்றும் சூப்பர் உமன் கதையில்லை, எல்லோருக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள படம்தான் என்று இன்று நடைபெற்ற ராங்கி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் திரிஷா.
அதுமட்டுமல்ல இந்த படத்திற்காகத்தான் முதன்முறையாக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு தான் சென்றதாகவும் கூறிய திரிஷா அங்கே சென்றபோது நாங்கள் பேசிய மொழி அவர்களுக்குப் புரியவில்லை.. அவர்கள் பேசிய மொழி எங்களுக்கு புரியவில்லை.. ஒரு வழியாக பாஷை புரிந்து கொண்டு பின்னர் காட்சியை படமாக்கினோம் என்று கூறினார் .
“அதுமட்டுமல்ல அங்கே பெரும்பாலும் இங்கே ஆக்சன் சம்பந்தமான காட்சிகளை படமாக்கும்போது இயக்குனர் சரவணன் இதில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி முதற்கொண்டு எல்லாமே ரியலாக இருந்தால் நல்லது என விரும்பினார்.
அதன்படியே இருக்கும் மிலிட்டரியின் உதவியுடன்தான் காட்சிகளை படமாக்கினோம், ஆக்சன் படம் என்றாலும் இதில் அனைவரும் நம்பும் விதமான ஆக்ஷன் காட்சிகளையே வைத்துள்ளோம்” என்று கூறினார் திரிஷா.