கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குறிப்பாக கொரோனா முதல் அலை பரவ ஆரம்பித்த சமயத்தில் ஓடிட்டு தளத்தில் வெளியான படம் சூரரைப்போற்று. சூர்யா கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏர்டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இந்தப்படம் இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியிலும் இந்த படத்தை சுதா கொங்கரா தான் இயக்குகிறார். அதேபோல ஜிவி பிரகாஷ் குமார் தான் இந்த படத்திற்கு இந்தியிலும் இசையமைக்கிறார்.

பொதுவாக ஒரு மொழியில் ஒரு படத்தில் ஹிட்டான பாடல்கள் ரீமேக் செய்யப்படும் போதும் பயன்படுத்தப்படுவது வாடிக்கைதான். ஆனால் இந்த படத்திற்காக ப்ரெஷ்ஷான பாடல்களை உருவாக்கி வருகிறார்கள் இயக்குனர் சுதா கொங்கராவும் ஜி வி பிரகாஷ் குமாரும்.

இந்த பாடல் உருவாக்கத்தின்போது தாங்கள் எடுத்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா.