இயக்குனர் அஜய் ஞானமுத்து ஒரு வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானது கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அவர் இயக்கிய டிமான்டி காலனி என்கிற ஹாரர் படத்தில் தான். அந்த படத்தின் வித்தியாசமான கதையம்சம் ரசிகர்களை ஈர்த்ததுடன் அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கும் படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
தொடர்ந்து இமைக்கா நொடிகள் படத்தில் அந்த எதிர்பார்ப்பை தக்கவைத்த அஜய் ஞானமுத்து, அடுத்ததாக இயக்கி சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தில் அந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்ய தவறினார்.
தற்போது ஹிட் படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் டிரெண்ட் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் அஜய் ஞானமுத்துவும் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை துவக்கியுள்ளார்.
முதல் பாகத்தில் நடித்த அருள்நிதி தான் இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 40 சதவீத காட்சிகளை படமாக்கி முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் அஜய் ஞானமுத்து. கோப்ரா படத்தை போல மிக நீண்ட நாட்களாக படப்பிடிப்பை இழுத்தடிக்காமல் விரைந்து முடிக்க திட்டமிட்டு வேலை பார்த்து வருகிறாராம் அஜய் ஞானமுத்து.