2022 ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் முடிய போகிறது. கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பல முக்கியமான படங்கள் வெளியாக ஏற்கனவே முடிவு செய்திருந்தாலும், அந்த நாளில் அவதார் படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தங்களது ரிலீஸ் செய்தியை மாற்றி வைத்தன.

ஜனவரிக்குப் பின் பொங்கலன்று வாரிசு, துணிவு ஆகிய படங்கள் வெளியாவதால் அவற்றின் ஓட்டம் பிப்ரவரி முதல் வாரம் வரை தியேட்டர்களில் நீடிக்கும். அதன் பிறகு தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியாக இருக்கிறது.
அதனால் அவதார் படத்திற்காக தங்களது ரிலீஸ் தேஹியை மாற்றி வைத்த சில படங்கள் இந்த வருட கடைசியில் வரும் டிசம்பர் 30ம் தேதி தங்களது படங்களை வெளியிடுகின்றன.

எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகி பல மாதங்களாக ரிலீஸுக்காக காத்திருந்த ராங்கி திரைப்படம் டிசம்பர் 30ல் தான் வெளியாகிறது. இதில் த்ரிஷா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அதேபோல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக நடித்துள்ள ஓ மை கோஸ்ட் என்கிற படமும் இதே தேதியில் தான் வெளியாகிறது. இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இவர்களை விட ஒரு படி மேலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா படமும் இதே டிசம்பர் 30 தான் வெளியாகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் படமும் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி வருட கடைசியில் பல முன்னணி கதாநாயகிகளின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது எதை பார்ப்பது, எதை விடுவது என ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.