நடிகர் விஜய் கலந்துகொள்ளும் அவரது படங்களின் இசை வெளியீட்டு விழா மேடைகளில் சொல்லும் குட்டிக்கதைகள் ரொம்பவே பிரசித்தம். இதில் பல சமயங்களில் அரசியல் கலந்தும் குட்டி கதைகள் இடம்பெறும். அப்படி விஜய் சொந்த போகும் அடுத்த குட்டிக்கதையை கேட்க தயாராக இருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக வெளியாகிஉள்ளது விஜயின் வாரிசு பட இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு.
தற்போது தெலுங்கில் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தெலுங்கில் வாரிசுடு என்கிற பெயரில் தயாராகியுள்ளது.
கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். முதன்முறையாக விஜய்யும் தமனும் இணையும் படம் என்கிற எதிர்பார்ப்பு இந்த படத்தின் பாடல்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில் இந்த படத்தின் மூன்று பாடல்கள் லிரிக் வீடியோக்களாக வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படம் தெலுங்கில் வெளியானாலும் கூட விஜய் இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் சென்னையில் மட்டுமே கலந்து கொள்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு பிறகு நடைபெறும் விஜய் பட இசை வெளியீட்டு விழா என்பதால் விழாவும் பிரமாண்டமாக இருக்கும், விஜய்யின் பேசும் அதிரடியாக இருக்கும் என ரசிகர்கள் இப்போது இருந்தே விழா மூடுக்கு தங்களை மாற்றிக்கொள்ள துவங்கி விட்டார்கள்.