V4UMEDIA
HomeNewsKollywoodஆன்லைன் ரம்மியை திரை உலக பிரபலங்கள் ஊக்குவிக்க கூடாது ; நடிகர் ராஜ்கிரண் காட்டம்

ஆன்லைன் ரம்மியை திரை உலக பிரபலங்கள் ஊக்குவிக்க கூடாது ; நடிகர் ராஜ்கிரண் காட்டம்

கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்கிற பேச்சு தமிழ்நாடு எங்கும் வலுப்பெற்று உள்ளது. கிட்டத்தட்ட இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் 37 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இதை தடை செய்வதற்கு ஒரு பக்கம் சட்டம் இயற்றி அது குறித்த சிக்கல் இன்னும் நீடிக்கின்றனது.

இந்த நிலையில் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக தமிழகத்தில் நடிகர் சரத்குமார் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் ஒரு சினிமா பிரபலம் என்பதால் அவருடைய பேச்சை பார்த்து பலரும் இந்த விளையாட்டில் ஈடுபடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இருந்தாலும் சரத்குமார் தான் இந்த விளம்பரத்தில் நடிப்பதை நியாயப்படுத்தும் விதமாகவே பேசி வருகிறார். அரசு தடை செய்து விட்டால் நான் எதற்காக விளம்பரத்தில் நடிக்க போகிறேன் என்றும் நான் சொல்லி விளையாட போகிறார்களா என்ன என்றும் கூறி வருகிறார் சரத்குமார்.

இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரண் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் இதற்கு சினிமா பிரபலங்கள் யாரும் விளம்பரம் என்கிற பெயரில் துணை போகக்கூடாது என்றும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சீட்டாட்டம் என்பது மிக மோசமானது.  அது ஒரு போதை போன்றது. குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிடும்.. பணத்திற்காக எத்தகைய கீழமையான செயல்களையும் செய்ய வைக்கும். அதனால் தான் முப்பது வருடங்களுக்கு முன்பே சீட்டாட்டத்தின் கொடுமையை மையப்படுத்தி எல்லாமே என் ராசாதான் என்கிற ஒரு படமே நான் எடுத்தேன்.

ஆனால் இன்று சீட்டாட்டம் மறைந்து அது இன்று ஆன்லைன் ரம்மி என்கிற டிஜிட்டல் வடிவில் வந்து இளைஞர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது இதுவரை 37 பேர் இறந்து விட்டனர். இதை தடை செய்வதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும்.. இந்த ஆன்லைன் தமிழ் விளையாட்டை திரையுலகை சேர்ந்தவர்கள் யாரும் விளம்பரப்படுத்தி ஊக்குவிக்கக் கூடாது” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ராஜ்கிரண்.

Most Popular

Recent Comments