கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சுந்தர் சி. ஒரு கட்டத்தில் பல இயக்குனர்களுக்கும் ஏற்படும் நடிப்ப தாகம் இவருக்கும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தலைநகரம் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சுந்தர் சி தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

இப்போதும் கூட ஒரு பக்கம் இயக்கம், இன்னொரு பக்கம் நடிப்பு என மாறிமாறி நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் அறிமுகமான தலைநகரம் படம் தற்போது தலைநகரம்-2 என்கிற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தை வி இசட் துரை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் போலீசால் என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட சுந்தர் சியின் ரைட் கதாபாத்திரம் அதிர்ஷ்டவசமாக அதில் இருந்து உயிர் தப்பி மீண்டும் தனது ராஜாங்கத்தை நிலைநிறுத்துவதற்கு அதிரடி ஆட்டம் ஆடுவதாக இந்த டீசர் சொல்கிறது.

படம் முழுவதும் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதும், சுந்தர்சி இதில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார் என்பதும் டீசரை பார்க்கும் போதே புரிகிறது. நிச்சயம் ரசிகர்களுக்கு தலைநகரம் 2 ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.