மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே தன் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கி விட்டார். அதை தக்கவைக்கும் விதமாக கார்த்தி நடித்த கைதி, விஜய் நடித்த மாஸ்டர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் என அவரது வெற்றிகளின் உயரம் கூடிக் கொண்டே போகிறது.

குறிப்பாக சினிமாவை விட்டு கிட்டத்தட்ட ஒதுங்கி விட்டார் என நினைக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனை விக்ரம் படத்தின் வெற்றி மூலம் மீண்டும் ஒரு புதிய பாய்ச்சலுக்கு தயார் படுத்தி விட்டார்.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்பது அறிவிக்கப்பட்டு அதற்கான பூஜையும் சமீபத்தில் போடப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக இயக்கப்போகும் படம் எது என பலரும் பலவிதமாக பேசிவருகிறார்கள். அதேசமயம் சமீபத்தில் நடைபெற்ற பிரபல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு லோகேஷ் கனகராஜ் பேசும்போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்.

விக்ரம் படத்தை அவர் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்கிற கான்செப்டில் உருவாக்கியிருந்தார். அதாவது ஏற்கனவே கமல் நடித்த விக்ரம் படத்தில் இருந்தும், தான் இயக்கிய கைதி படத்தில் இருந்தும் சில கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து இந்த புதிய படத்தில் உலாவ செய்திருந்தார். புதிதாக சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தையும் இணைத்திருந்தார்.

அடுத்ததாக லோகேஷ் இயக்கும் படம் கார்த்தி நடிப்பில் கைதி 2 ஆக இருக்கலாம் அல்லது கமல் நடிப்பில் விக்ரம் 2 ஆக இருக்கலாம் அல்லது விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து முழு நீள படமாகவும் உருவாகலாம் என்று கூறியுள்ள லோகேஷ் கனகராஜ் இந்த வகையில் எனக்கு 10 வருடத்திற்கு படம் இயக்குவதற்கு கதை பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளார்