கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சூர்யா நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளியான படம் மௌனம் பேசியதே. இந்த படத்தில்தான் நடிகை திரிஷா கதாநாயகியாக அறிமுகமானார். இயக்குனர் அமீரின் முதல் படமும் இதுதான்.
இந்த படத்தில் மூலம் சூர்யாவின் நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்தார் அமீர். அதேபோல இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு திரையுலகில் மிக நீண்ட பயணமாக 20 வருடங்களை மிக எளிதாக கடந்து வந்துள்ளார்.
ஒரு கதாநாயகி திரையுலகில் பத்து வருடங்கள் தாக்கு பிடித்தாலே பெரிய விஷயம் என்கிற நிலையில் 20 வருடங்களை கதாநாயகியாகவே நடித்து கடந்து வந்திருக்கிறார் என்றால் இது மிகப்பெரிய சாதனைதான்.
ஒவ்வொரு முறை திரிஷாவின் மார்க்கெட் அவ்வளவுதான் என நினைக்கும் போதெல்லாம் 96, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் போன்ற தரமான கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி அவரை இன்னும் உற்சாகத்துடன் ஓட வைத்து வருகின்றன. இப்போதும் அவரது கைவசம் நான்கு படங்களுக்கு குறையாமல் நடித்து வருகிறார்.
அதேபோல இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீர் யோகி என்கிற படம் மூலம் கதாநாயகனாக மாறினார். வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவரது இயக்கத்தில், நடிப்பில் படங்கள் வெளிவந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட இன்னமும் சினிமாவில் பரபரப்பாகவே இயங்கி வருகிறார் அமீர். இவர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது திரையுலகில் அமீர் இருபது வருடம் நிறைவு செய்துள்ளதை கவுரவிக்கும் விதமாக அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினர் தெரிவித்துக் கொண்டனர்.