சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளாக இருந்தாலும் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக டைரக்சன் துறையில் அடியெடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனது கணவர் தனுஷ் நடிப்பில் 3 என்கிற படத்தை இயக்கியவர், அதன்பிறகு கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார்.
இந்தநிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் கிரிக்கெட் விளையாட்டை தனது உயிராக நினைக்கும் விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக நடிப்பது மிகவும் பொருத்தமானது இன்னொரு ஹீரோவான விக்ராந்தும் கூட நல்ல கிரிகெட் வீரர் தான்.
சமீபத்தில் இந்தப்படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து விஷ்னு விஷால் கூறும்போது, “சில வருடங்களுக்கு முன் தெலுங்கில் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான ஜெர்சி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக இருந்தேன். ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் கைவிடப்பட்டது. அப்படி அந்தப்படம் கைநழுவியதால் தான் இப்போது லால் சலாம் படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கும் வாய்ப்பு வந்தபோது ஒப்புக்கொள்ள முடிந்தது” என்று கூறியுள்ளார்.