சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் அடுத்த வருடம் சம்மர் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாகவே அவரது புதிய படம் வெளியாவது போன்ற தற்போது ரீ ரிலீஸ் ஆக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டத்தையும் ஆரவாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2003ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரித்து அவரே கதை எழுதி நடித்த படம் பாபா. அரசியல் பின்னணியில் உருவாகியிருந்த இந்த படம் அப்போது தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சுஜாதா விஜயகுமார், எம்.என் நம்பியார், சாயாஜி ஷிண்டே, கருணாஸ், சங்கவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் அந்த சமயத்தில் சில அரசியல் சூழ்நிலைகளால் ரசிகர்கள் பலரை சரியான முறையில் சென்றடைய தவறிவிட்டது.

அந்த குறை இப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்ல அவரது ரசிகர்கள் பலருக்கும் கூட உண்டு.
இந்த நிலையில் தற்போது பாபா டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளன்று இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் புதிதாக சில காட்சிகள் இணைக்கப்பட்டு அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே டப்பிங் பேசியுள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து லைக்கா நிறுவனம் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது என்பதும் அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.