கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் கன்னட சினிமாவை தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட் வரை அழைத்துச் சென்று கன்னட சினிமாவின் எல்லையை விரிவுபடுத்திய பெருமை ஹோம்பலே தயாரிப்பு நிறுவனத்தை சேரும்.
அதுமட்டுமல்ல கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான காந்தாரா திரைப்படமும் இந்த நிறுவனத்தின் மகுடத்தில் இன்னொரு வைரக்கல் ஆக ஜொலிக்கிறது. இந்த நிலையில் தற்போது இவர்கள் நேரடியாக தமிழிலேயே படம் தயாரிக்கிறார்கள்.
அந்த படத்திற்கு ரகு தாத்தா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். சமந்தா நடித்த பேமிலி மேன்’ வலை தொடரின் எழுத்தாளர் சுமன் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஓர் இளம் பெண் தன்னைச் சார்ந்தவர்களையும், தன் நிலத்தையும், அடையாளத்தையும் காக்கும் போராட்டத்தில் தன்னையே அறிந்துக்கொள்ளும் சவாலான பயணத்தை, நகைச்சுவை கலந்து, கூறும் பொழுது போக்கு சித்திரமாக உருவாகிவரும் இந்த படம் 2023ல் வெளியாக இருக்கிறது.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் M. S. பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.