திண்டுக்கல்லில் பூக்கடை நடத்தும் இளவரசுவின் மகன் விஜய்சேதுபதி. தனது மகன் அரசு வேலைக்கு போக வேண்டுமென அப்பா ஆசைப்பட, போலீஸ் வேலைக்கு தயாராகிறார் விஜய்சேதுபதி. இதற்கிடையே ரவுடி காளகேயா பிரபாகருடன் மோதல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் ரவுடி எம்எல்ஏ ஆகிறார்.. விஜய்சேதுபதி டிஎஸ்பி ஆகிறார். இருவரும் தங்களது கணக்குகளை எப்படி தீர்த்துக் கொள்கிறார்கள், யாருக்கு எவ்வளவு சேதாரம் ஆனது என்பது மீதிக்கதை
விஜய்சேதுபதி நடிக்கும் மூன்றாவது போலீஸ் படம் இது. சேதுபதி படத்திற்கு பிறகு இதில் இன்னும் பல அதிரடிகளை நிகழ்த்துவார் என எதிர்பார்த்தால் சூழலுக்கு ஏற்ப ஒரு சூழ்நிலைக் கைதி போலீஸ் ஆகவே இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு தன்னால் முடிந்தவரை உயிர் கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி. குறிப்பாக இடைவேளைக்கு பின்னர் தான் இவர் போலீஸ் ஆகிறார்.
வில்லனாக காளகேயா பிரபாகர் ஓரளவு மிரட்டுகிறார். கதாநாயகியாக அனு கீர்த்தி வாஸ் துடுக்கும் மிடுக்குமாக ஓரளவுக்கு கலகலப்பூட்டுகிறார். விஜய்சேதுபதியின் நண்பர்களாக லிங்கா, பிரித்வி பாண்டிராஜ் மற்றும் காமெடி நடிகர் புகழ், சிங்கம்புலி, ஷிவானி என பலரும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றனர்.
போலீஸ் படம் என்றாலே கதாநாயகன் தனது எதிரியை அது ரவுடியாகவோ, அரசியல்வாதியாகவோ, தீவிரவாதியாகவோ யாராக இருந்தாலும் அவர்களை எப்படி சமாளிக்கிறார் என்பதில்தான் படத்தின் விறுவிறுப்பு கூடும்.
இந்த படத்தின் இயக்குனர் பொன்ராம் இன்னும் சில அதிரடி காட்சிகளை சேர்த்து இருந்தால் அந்த விறுவிறுப்பு இந்த படத்திற்கும் கிடைத்திருக்கும். அந்த வகையில் இந்த டிஎஸ்பி கண்டிப்பு காட்டாமல் கருணை காட்டி விட்டாரே என்கிற வருத்தம் நிச்சயம் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்படும்.