கும்பகோணம் பகுதியில் மிகப்பெரிய தாதாவாக வலம் வருபவர் கிஷோர். அவருக்கு தொழில் கற்றுக் கொடுத்த வாத்தியார் மாஸ்டர் ராஜநாயகம், கிஷோர் தன்னை மீறி ரவுடிசம் செய்வதால் அவரை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் கிஷோரின் தங்கை நீரஜா அண்ணனின் இந்த ரவுடியிசம் பிடிக்காமல் அவருடன் கோபித்துக்கொண்டு தனது சித்தப்பா வீட்டிற்கு சென்று விடுகிறார். நீரஜாவை காதலிக்கும் அந்த ஊர் இளைஞன் விஷ்வாவிற்கு அண்ணன், தங்கை இடையிலான பிரச்சனை தெரிய வருகிறது.
அதனால் நீரஜாவின் காதலை பெற அவரது அண்ணனை நல்லவனாக மாற்றும் முயற்சியில் இறங்குகிறார் விஷ்வா. அதில் படிப்படியாக முன்னேறி ஓரளவு வெற்றியும் பெறுகிறார். ஆனால் எல்லாம் கைகூடி வரும் நேரத்தில் விதி வேறு விதமாக தன் வேலையை காட்டுகிறது.
அண்ணன் தங்கை மீண்டும் ஒன்று சேர்ந்தனரா ? விஷ்வாவின் காதல் கை கூடியதா ? மாஸ்டர் ராஜநாயகம் கிஷோர் மீதான தனது பழியை தீர்த்துக் கொண்டாரா ? என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.
அண்ணன் தங்கை பாசம், ரவுடியிசம், இளம் பருவ காதல் என இந்த மூன்று விஷயங்களையும் மையப்படுத்தி முக்கோணமாக இந்த கதையை நகர்த்தி சென்றுள்ளார் படத்தின் இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி,
ஜென்டிலான தாதா என்றால் கிஷோரை தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது என்பது போன்று, அதற்கென்றே பிறந்தவர் போல இந்த படத்தில் கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார் கிஷோர். அவர் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன.
இளம் கதாநாயகனாக நடித்துள்ள விஷ்வா, காதலுக்காக கதாநாயகி பின்னால் தாடி வளர்த்துக்கொண்டு சுற்றாமல், அழகாக மாற்றி யோசித்து காய் நகர்த்தும் விதம் அருமை.. இளம் பருவத்தினர் என்பதால் இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்துள்ளார் என்றாலும் அடுத்து வரும் படங்களில் இன்னும் நடிப்பை கொஞ்சம் மெருகேற்றிக் கொண்டால் ஒரு நல்ல இடத்திற்கு வருவார்.
நாயகி நீரஜா அலட்டல் இல்லாத பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் எதிராபத அதிர்ச்சியையும் நமக்கு கொடுத்து விடுகிறார். பஸ் கண்டக்டராக நடித்துள்ள கஞ்சா கருப்பு காட்சிகளை கலகலப்பாக நகர்த்திச்செல்ல உதவியிருக்கிறார்.
விஷ்வாவின் நண்பனாக வரும் பசங்க பாண்டி நீரஜாவின் சித்தப்பாவாக வரும் பசங்க சிவகுமார் உள்ளிட்ட பலரும் பொருத்தமான தேர்வு. குறிப்பாக தாதாவாக வரும் மாஸ்டர் ராஜநாயகம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புது வில்லன் கிடைத்து விட்டார் என தனது நடிப்பால் உணர்த்தியுள்ளார்.
ரவுடியிசம் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தியை போன்றது. அது தன்னை மட்டும் அல்லாது தன்னை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் எப்படி பாதிக்கிறது என்பதை கிளைமாக்ஸ் காட்சியின் மூலம் அழகாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி.
நீண்ட நாளைக்கு பிறகு ஒரு அருமையான அண்ணன் தங்கை கதையம்சம் கொண்ட படமாக வெளியாகியிருக்கும் இந்த மஞ்சக்குருவியை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.