சிறுவயதிலிருந்தே மல்யுத்தம் என்றால் ஆர்வமாக பங்கெடுக்கும் போட்டியாளராக மாறிவிடுகிறார் கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்ய லட்சுமி. இதனாலேயே அவரது திருமணம் பலமுறை தடைபட்டு போகிறது.
அதேபோல தமிழகத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் சொந்த வீடு. தோட்டம் என வைத்துக்கொண்டு தனது மாமா கருணாஸுடன் சேர்ந்து ஊர்சுற்றி பொழுதை கழிக்கும் விஷ்ணுவுக்கு தன்னைவிட குறைந்த படிப்பு படித்த, அதேசமயம் நீளமான கூந்தல் கொண்ட பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது விருப்பம்.
இந்த நிலையில்தான் கருணாஸின் நண்பனும் ஐஸ்வர்ய லட்சுமியின் சித்தப்பாவுமான முனீஸ்காந்த், ஐஸ்வர்ய லட்சுமி பற்றிய உண்மையை மறைத்து விஷ்ணு விஷாலுடன் திருமணம் செய்து வைக்கிறார். குடும்பத்தின் நலன் கருதி இந்த திருமணத்திற்கு சம்மதித்த ஐஸ்வர்ய லட்சுமியும் சவரி முடியை சூடிக்கொண்டு, தனது கணவரின் எண்ணங்களுக்கு ஏற்ப புகுந்த வீட்டில் நடந்து கொள்கிறார்.
விஷ்ணுவின் மாமாவான கருணாஸ், தனது மனைவியை தான் ஆரம்ப காலத்திலிருந்தே அடக்கி வைத்திருப்பது போல, விஷ்ணுவையும் குடும்ப வாழ்க்கையை நடத்த சொல்கிறார். ஒரு கட்டத்தில் எதிர்பாராத சூழலில் தன் மனைவி ஒரு மல்யுத்த வீராங்கனை என்பதும், அவளுக்கு நிஜமாகவே நீளமான கூந்தல் இல்லை என்பதும் ஒரே சமயத்தில் விஷ்ணுவுக்கு தெரியவருகிறது.
இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால், தனது மனைவி விஷயத்தில் எந்த முடிவு எடுக்கிறார், அது அவரது வாழ்க்கையையே எப்படி திசை திருப்புகிறது என்பதை முதல் பாதி காமெடியாகவும் இரண்டாம் பாதி செண்டிமெண்ட் கலந்த உத்வேகத்துடனும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் செல்ல அய்யாவு.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திற்கு பிறகு மீண்டும் அதே போன்று ஒரு சுறுசுறுப்பான கிராமத்து இளைஞனாக மீண்டும் தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளார் விஷ்ணு விஷால். சிட்டி, கிராமம் என இரண்டு விதமான கதாபாத்திரங்களுமே அழகாக செட்டாவது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இந்தப்படத்தில் தனது மனைவி யார் என்கிற உண்மை தெரியாமல் உதார் விடுவதும் அவரைப் பற்றிய உண்மை தெரிந்ததும் அப்படியே பம்முவதும் என செம கலாட்டா பண்ணியிடுக்கிறார். அதேசமயம் தனது தாய்மாமனை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் மனைவியை பிரியும் அளவிற்கு செல்வது என அவரது கதாபாத்திரம் உணர்ச்சிகளின் முடிவுக்கு கட்டுப்பட்ட ஒரு கதாபாத்திரமாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் விஷ்ணுவிஷால்.
படத்தின் நாயகன் அவர் தான் என்றாலும், அவரைவிட ஒரு படி மேலே சென்று அவரையே தூக்கி சாப்பிடும் விதமான கதாபாத்திரம் ஐஸ்வர்ய லட்சுமிக்கு. அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை சரியாக தயார் செய்துகொண்டு அனைவரும் நம்பும்படியான பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பதுதான் இந்த படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட் ஆக அமைந்து விட்டது. திருமணம் செய்து கொள்வதற்காக தனது கனவை தள்ளி வைப்பதும், திருமணமே தனக்கு கால் விலங்காக மாறும்போது, அதை மீறி தனக்கான அடையாளத்தை மீட்டெடுக்க முயற்சிப்பதும் என தேவையான இடத்தில் நகைச்சுவை, சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் என அதிரடி காட்டி நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவருக்கென்று தனி ரசிகர்களை உருவாவார்கள். அந்த அளவிற்கு அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
பெண்களை கட்டுப்பெட்டியாகவே வைத்திருக்க வேண்டுமென எப்போதும் அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் கருணாஸ், இந்த படத்தில் மிகவும் திருப்பம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நீண்ட நாளைக்குப்பிறகு நகைச்சுவை கலந்த நடிப்பிலும், தன்னை வெளிப்படுத்தி உள்ளார். அவர் இனி இதுபோன்ற நகைச்சுவை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் இன்னும் பல வருடங்கள் ரசிகர்களால் ரசிக்கப்படுவார்.
விஷ்ணுவின் நண்பனாக வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் படம் முழுவதும் எந்த இடங்களில் எவ்வளவு நகைச்சுவை தேவையோ அதை தேவையான அளவுக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இவரை பல படங்களில் இதுபோல் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்கிற வருத்தம் படம் பார்க்கும் பலருக்கும் ஏற்படும்.
அதே போல சில படங்களில் நன்றாகவும் சில படங்களில் ஏமாற்றம் தரும் விதமாக வந்து செல்லும் ரெடின் கிங்ஸ்லி, இந்தப்படத்தில் ரசிகர்களை ஏமாற்றவில்லை.. குறிப்பாக அவரும் விஷ்ணு விஷாலும் குஸ்தி கற்றுக்கொள்ளும் பயிற்சி மையத்தில் பண்ணும் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன.
காமெடி குணச்சித்திரம் என இரண்மே அளவாக கலந்த பக்குவமான நடிப்பு முனீஸ்காந்த்துடையது. வில்லன்களாக அஜய், சத்ரு என இரண்டு பேரும் இரண்டு வித பரிமாணங்களில் வில்லத்தனம் காட்டியுள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை நகைச்சுவையைக்கூட அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது. பாடல்கள் படத்தின் வேகத்திற்கு கொஞ்சம் ஸ்பீட் பிரேக்கர் தான் என்றாலும், தனியாக கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
படத்தின் கிளைமாக்ஸில் ஜெயிக்கப்போவது கணவனா ? மனைவியா ? அப்படி யாராவது இதில் ஒருவர் தோற்று விட்டால் அவர்களது வாழ்க்கை என்னவாகும் என்கிற ஒரு பதைபதைப்பை இடைவேளைக்குப்பின் ஏற்படுத்தி, கிளைமாக்ஸில் அதற்கு சரியான ஒரு தீர்வையும் கொடுத்துள்ள இயக்குனர் செல்ல அய்யாவுக்கு ஒரு சபாஷ் போடலாம்.
அடுத்ததாக படம் துவங்கியதிலிருந்து இறுதிவரை எந்த இடத்திலும் கலகலப்பு குறையாமல் விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்தி சென்றதற்கும் அவருக்கு தனி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம். குறிப்பாக இந்தப் படத்தில் வரும் இன்டர்வல் பிளாக் இதற்கு முன்பு எந்த படத்திலும் பார்த்திராத ஒன்று. பெண்களின் கைதட்டலால் தியேட்டரே அதிர்கிறது.
மொத்தத்தில் இந்த கட்டா குத்து திரைப்படம் குடும்பத்தினருடன் சேர்ந்து பார்க்கவேண்டிய ஒரு அம்சமான படம். படம் பார்ப்பவர்களையும் மீண்டும் ஒருமுறை பார்க்க தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் படம் என தாராளமாக கூறலாம்.