கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் லவ்டுடே என்கிற படம் வெளியானது. ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்கிற படத்தை இயக்கிய இருந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

கதாநாயகியாக இவானா நடிக்க, முக்கிய வேடங்களில் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா, இந்த படத்துக்கு இசை அமைத்திருந்தார்.

கடந்த 1997ல் இயக்குனர் பாலசேகரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லவ்டுடே என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் அந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மூலமாக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியிடம் இருந்து கேட்டு பெற்று தனது படத்திற்கு வைத்தார்.

இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வர இந்த டைட்டிலும் ஒரு முக்கிய காரணம். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று, தற்போது தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விஜய் நடித்த லவ் டுடே படத்தின் இயக்குனர் பாலசேகரனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த லவ் டுடே படத்தின் பணிகளின்போது நான் 1997ல் வெளியான லவ்டுடே படத்தின் இயக்குனர் பாலசேகரனுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.. நீங்கள் எந்த காலத்திற்கும் பொருந்தும் விதமான ஒரு டைட்டிலை உருவாக்கி உள்ளீர்கள்.. அதற்காக உங்களுக்கு நன்றி சார்..” என்று கூறியுள்ளார்.