சினிமாவை பொறுத்தவரை அது எந்த மொழியானாலும் பெண் இயக்குனர்களின் பங்களிப்பு என்பது வெகு குறைவாகவே இருக்கிறது. அப்படி ஒரு சில பெண்கள் முட்டிமோதி படம் இயக்கும் வாய்ப்பை பெற்றாலும், சரியான கதை தேர்வை மேற்கொள்ளாமல் தாங்கள் விரும்பியதை மட்டுமே படமாக்கியதால் ரசிகர்களின் வரவேற்பை பெற தவறினார்கள்.
ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மேலே வரும் பெண் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் சமீபகால உதாரணம் நம் தமிழ் சினிமா இயக்குனர் சுதா கொங்கரா.
அவரது முதல் படம் தோல்வி என்றாலும் இரண்டாவது படமான இறுதிச்சுற்று மூலம் வெற்றிகரமான இயக்குனர் என பெயரெடுத்த அவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்கிற சுயசரிதை படத்தை எடுத்து முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் உருவாகி, வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் விஜயானந்த் என்கிற படத்தை இயக்கியதன் மூலம் அந்த படத்தின் இயக்குனர் ரிஷிகா சர்மாவும் இன்னொரு சுதா கொங்கராவாக உருவெடுப்பார் என ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காரணம் முதல் படத்தை சாதாரண கமர்சியல் படமாக எடுத்தவர், இந்த இரண்டாவது படத்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி விஜயானந்த் என்கிற பெயரில் படமாக இயக்கி உள்ளார்.
இது கன்னட சினிமாவில் முதன்முதலில் வெளியாகும் ஒரு சுயசரிதை படமாகும். படத்தின் டிரைலரை பார்க்கும்போது அந்த படத்தின் தரம் எப்படி என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு அனுபவம் வாய்ந்த நேர்த்தியான இயக்குனர் இயக்கியது போன்று, இந்த படத்தை இயக்கியுள்ளார் ரிஷிகா சர்மா.
சமீபகாலமாக கன்னட சினிமாவில் இருந்து வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் காந்தாரா ஆகிய படங்கள் பான் இண்டியா படங்களாக மாரி கன்னட சினிமாவிற்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளன. அந்த வகையில் இந்த விஜயானந்த் படமும் இடம் பிடிக்கும் என நம்பலாம் .