சினிமாவில் இயக்குனராக நுழைய நினைப்பவர்களுக்கு குறும்படம் என்பது ஒரு விசிட்டிங் கார்டு போலத்தான். என்னதான் பணம் இருந்தாலும் கொஞ்சம் அனுபவமும் இருந்தால் அது திரையுலகில் பயணிக்க உதவியாக இருக்கும். அப்படித்தான் அடிப்படையில் ஒரு சார்ட்டட் அக்கவுண்ட் ஆன ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் முதன்முதலாக சஷ்தி என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர் SK காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
இந்த படம் கிட்டத்தட்ட 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 77 விருதுகளை வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த குறும்பட திரையிடலுடன் கூடிய பத்திரிக்கையாளர் சந்திப்பும் விருது பெற்ற கலைஞர்களை கவுரவிக்கும் நிகழ்வில் பேசிய இயக்குனர் ஜூட் பீட்டர் டேமியான் இந்த குறும்படத்தை இயக்குவதற்காக திரைப்பட கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதம் பயிற்சி பெற்றதாகவும் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தின் கதையை உருவாக்குவதற்கு ஒரு வருட காலத்துக்கு மேல் எடுத்துக்கொண்டதாகவும் கூறினார். அதுமட்டுமல்ல இந்த குறும்படத்தில் லைவ் ரெக்கார்டிங் முறையில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வசனங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது முதல் படத்திலேயே 77 விருதுகளை பெற்றுள்ள இயக்குனர் ஜூட் பீட்டர் டேமியான் என்னை ஆச்சரியப்படுத்துகிறார். என்னுடைய காலங்களில் நான் படம் எடுத்தபோது படம் தியேட்டரில் வெளியானதா, ரசிகர்கள் கைதட்டினார்களா என்பதுடன் நின்று விடுவோம்.
விருதுக்கு அனுப்புவது பற்றியெல்லாம் யோசித்ததில்லை. இப்போது இவரது முயற்சியை பார்க்கும்போது, எனக்கும் படங்களை விருதுக்கு அனுப்பும் அந்த நுணுக்கங்களை கற்றுக்கொடுங்கள் என்று அவரை கேட்டுக்கொள்கிறேன்” என பாராட்டினார்