தம்பி வெட்டோத்தி சுந்தரம் படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் பளிச்சென அடையாளம் பெற்றவர் இயக்குனர் வி.சி.வடிவுடையான் அதைத்தொடர்ந்து சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை இயக்கியவர் தற்போது ஃபேன்டஸி திரில்லராக உருவாகியுள்ள பாம்பாட்டம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் காக்க காக்க, நான் அவனில்லை, திருட்டுப்பயலே புகழ் நடிகர் ஜீவன், கதாநாயகியாக பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் நடித்துள்ளார். அம்ரேஷ் கணேஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக இந்த பாம்பாட்டம் படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.

இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள ரித்திகா சென், பருத்திவீரன் சரவணன், கூல் சுரேஷ், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படம் மும்பையில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளதாம்.
இந்த படம் கிபி 1000, 1500, 1980 என மூன்று விதமான காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த காலகட்டத்தை கண்முன்னே நிறுத்தும் விதமாக இதற்கான செட் மற்றும் உடைகள் எல்லாமே மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல போர் காட்சிகளுக்காக பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான குதிரைகள் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதையெல்லாம்விட இந்த படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு ஒன்றும் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறுகிறது. இந்த பாம்பு செய்யும் அட்டகாசம் இந்திய சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு ஆச்சரியம் என்கிறார்கள்.
படத்தின் ட்ரைலர் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த பாம்பாட்டம் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.