தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நகைச்சுவை நடிகராகவும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. அந்த வகையில் சில மூன்றாம் நிலை நடிகர்களின் அல்லது வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் அவர் நடிக்கும்போது அவரது புகைப்படத்தை பெரிதாக வைத்து போஸ்டர்களை உருவாக்கி படத்திற்கு பப்ளிசிட்டி செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
இதில் சில படங்களில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். சில படங்களில் அவரிடம் இரண்டு நாட்கள் மட்டுமே கால்சீட் வாங்கி ஆங்காங்கே வருவது போல காட்சிகளை எடுத்து சேர்த்து இருப்பார்கள். ஆனால் படத்தின் நாயகன் வேறு ஒருவராக இருப்பார். அதேசமயம் அந்த படத்திற்கு யோகிபாபு தான் கதாநாயகன் என்பது போல விளம்பரம் நடக்கும்.
அப்படி இதற்கு முன் இரண்டு மூன்று முறை நடந்து அது குறித்து யோகிபாபு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தன் தரப்பு விளக்கத்தை தந்து ரசிகர்களை எச்சரித்து விடுவார். காரணம் அவர் முழு நீள படத்தில் இருப்பார் என நம்பி வரும் ரசிகர்கள் ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்காகத்தான்.. இவை அவர் பிசியாவதற்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படமாக கூட இருக்கலாம்.
அந்த வகையில் தற்போது தாதா என்கிற வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கின்னஸ் கிஷோர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் நிதின் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். யோகிபாபு அவரது நண்பனாக நடித்து உள்ளார்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் யோகிபாபு மட்டுமே இடம் பெற்றுள்ளார். நாயகன் நிதின் சத்யா இடம்பெறவில்லை. உடனடியாக இந்த போஸ்டரை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்ட யோகிபாபு இந்த படத்தில் நான் கதாநாயகன் இல்லை.. நிதின் சத்யா தான் கதாநாயகன்.. நான் அவரது நண்பராக வருகிறேன்.. நான் ஹீரோ இல்லை.. மக்களே நம்பாதீங்க என்று பதிவிட்டுள்ளார். யோகிபாபுவின் இந்த நேர்ம்மையான பதிவுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது