சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் ஜல்லிக்கட்டு மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை மையப்படுத்தி வெளியான படம் காரி. அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் கதாநாயகன் சசிகுமாரை தவிர படத்தில் பலருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தாலும் அனைவரையும் கவனிக்க வைத்த ஒரு கதாபாத்திரம்தான் கிராமத்து வில்லனாக நடித்துள்ள அருண்மொழி தேவன்.
படத்தின் மெயின் வில்லனான பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தியை விட படம் முழுவதும் அதிகமான காட்சிகளில் இவர்தான் நடித்துள்ளார். இப்போது அல்ல.. சில வருடங்களுக்கு முன்பே சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான பாண்டியநாடு படத்தில் அறிமுகமானவர் தான் அருண்மொழி தேவன்.
இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் பக்கம் உள்ள கூவர் கூட்டம். இவரது தாத்தா கடலாடி தொகுதி முன்னாள் எம்எல்ஏ. அப்பாவும் கவுன்சிலர் தான். கோயமுத்தூரில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு அங்கேயே ஒரு ரெஸ்டாரண்ட் துவங்கினார். ஆனால் இவரது நாட்டம் சினிமாவில் இருந்ததால் அதை விட்டுவிட்டு பாடலாசிரியர் ஞானகரவேல் மூலமாக சினிமாவில் நுழைந்தார்.
சண்டி வீரன், மதுரை வீரன், கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார், இன்னொரு பக்கம் கிராமத்தை தேடி படமெடுக்க வரும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு லொகேஷன் மேனேஜராகவும் அறம், பவர்பாண்டி ராவணன் கூட்டம் போன்ற பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
இப்போது வெளியாகியுள்ள காரி படத்தின் வெற்றி இவரை இன்னும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெயம்ரவியின் தம்பியாக சைரன் என்கிற படத்திலும் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் மெயின் வில்லனாகவும் நடிக்கிறார் அருண்மொழித்தேவன்.