இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தொடர்ந்து காமெடி காட்சிகளில் இணைந்து நடிக்கும் அளவிற்கு திறமைமிக்க நடிகரான யோகிபாபு, சீனியர் ஹீரோக்கள், வளரும் நடிகர்கள் என பாகுபாடு பார்க்காமல் இணைந்து நடித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் முக்கியமான கதையம்சம் கொண்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அதிலும் வெற்றி பெற்று வருகிறார். இவர் திரையுலகில் நுழைந்தது சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் கதாநாயகனாக நடித்த யோகி திரைப்படத்தின் மூலம் தான். அந்த படத்தில் கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடித்ததால் அப்போதிலிருந்து யோகிபாபு என்கிற பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

அதைத்தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு படத்தில் நடித்தது, காக்கா முட்டை படத்தில் அருமையான நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தது அவரை அடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி முன்னணி நகைச்சுவை நடிகராக மாற்றின. தற்போது யோகி’ படம் திரைக்கு வந்து இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத்தளத்தில், கேக் வெட்டி எளிய முறையில் கொண்டாடினார் யோகிபாபு. மேலும் தன்னை இவ்வளவு தூரம் கொண்டு சேர்த்த திரைத்துறையினர் மற்றும் மீடியாக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தன்னை ‘யோகி’ படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, இப்படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோருக்கும், சின்னத்திரையில் ஆரம்பகாலத்தில் கிட்ட தட்ட 6 ஆண்டுகள் தன் திறமைகளை வெளிக்கொண்டு வந்த இயக்குனர் ராம் பாலாவுக்கும் தனக்கு வழிகாட்டியாக இருந்த இயக்குனர் சுந்தர் சிக்கும் இந்த நேரத்தில் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் யோகிபாபு