V4UMEDIA
HomeNewsKollywood153 இலங்கைத்தமிழ் அகதி மாணவர்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ளேன் ; நெகிழ்ந்த கருணாஸ்

153 இலங்கைத்தமிழ் அகதி மாணவர்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ளேன் ; நெகிழ்ந்த கருணாஸ்

நடிகர் கருணாஸ் தயாரிப்பாளராக மாறி தயாரித்துள்ள படம் சல்லியர்கள். இந்த படம் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அந்த சமயத்தில் மருத்துவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக நின்று அவர்களை காப்பாற்றினார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

மேதகு என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கருணாஸின் மகன் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் என இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்

சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்தப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கருணாஸ் பேசும்போது, “நான்கு நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்த சமயத்தில்தான் இயக்குநர் கிட்டு என்னை அழைத்து, மாவீரர் பிறந்தநாளில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தினால் நன்றாக இருக்கும் என கேட்டுக்கொண்டார். அப்படி குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த விழா. இந்த படத்தில் எனது மகனின் நண்பர் ஈஸ்வரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன். என் மகனும் அவனுடன் இணைந்து இசையமைப்பு பணிபுரிந்துள்ளார் என்றாலும் அவர் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன். ஆனால் இனிவரும் நாட்களில் எல்லாவிதமான தகுதிகளையும் வளர்த்துக் கொண்டால் எதிர்காலத்திற்கு நல்லதாக இருக்கும்.

இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை கூற கடமைப்பட்டுள்ளேன். இங்கே தமிழகத்தில் விஸ்காம் படித்த மாணவர்களுக்கு படிப்பை முடித்தபின் நல்ல தளம் கிடைப்பதில்லை. வருடத்திற்கு 2500 மாணவர்கள் படித்துவிட்டு வெளிவருகின்றனர். இவர்களுக்கு உதவிசெய்ய வேண்டிய  சினிமாவில் உள்ள தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் பஜ்ஜி, வடை சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

1985லிருந்து ஈழத்தமிழர்களுக்காக என்னால் இயன்றவரை ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது சொந்தப்பணத்தில் 153 இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்தேன் என்பதை பெருமையாக சொல்கிறேன். இன்று அவர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் கூட பணிபுரிந்து வருகிறார்கள். இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கி பின்னால் வரும் கென், ஈஸ்வர் போன்ற இளைஞர்களிடம் கொடுத்து விடுகிறேன்.. அவர்கள் அதை பார்த்துக்கொள்ளட்டும். இதுதான் என்னுடைய விஷன்.. இதற்கு எவ்வளவு செலவானாலும் பத்து பேரிடம் பிச்சை எடுத்தாவது அந்த பணத்தை கொடுப்பேன்” என்று கூறினார்.

Most Popular

Recent Comments